
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 37 நபர்கள் உயிரிழந்துள்ளனர், 95 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் பலருக்கு கண் பார்வை மங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கருணாபுரம் காலனியில் விஷச்சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் விட்டிலையே தங்கியிருந்த 32 பேரை கண்டறிந்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தமிழக அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
விஜய் தான் விதிவிலக்கு; தமிழ் திரையுலகம் யாரை கண்டு அஞ்சுகிறது? ஜெயக்குமார் விளாசல்