
கலாச்சார சீரழிவை உண்டாக்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் கமலஹாசனின் படங்களை திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என இந்து மக்கள் கட்சியினர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, முதன்முறையாக தமிழகத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி பேசிய சேரி பிஹேவியர் என்ற வார்த்தைக்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்த நடிகர் கமலஹாசனை கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடிகர் கமலஹாசனின் படங்களை திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என தெரிவித்தனர்.
உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமலஹாசனை கைத செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப் போவது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆழ்வார்பேட்டை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.