145 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி.. 3-வது தளத்துக்கு சீல் வைப்பு..!

By vinoth kumarFirst Published Dec 5, 2022, 9:40 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 145 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் வன்முறையாக வெடித்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தபள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி தீக்கரையாக்கினர். இதனையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில்  விடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே பள்ளி நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை, பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு தரப்பும் ஆய்வு செய்வு செய்த நிலையில், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொடுத்தப் பரிந்துரையை ஏற்று சீரமைப்புப் பணிகள் முழுமையாக நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. ஏ பிளாக்கின் விடுதி இயங்கி வந்த  3வது மாடி தளத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 145 நாட்களுக்கு பிறகு கனியாமூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 3வது தளம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

click me!