Kallakurichi Illicit Liqour Death : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தமிழநாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் உடல்நிலை குறைவால் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சில உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த சூழலில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50000 நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் கலந்த விஷச் சாராய உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும் முதலமைச்சர் அதிரடி உத்டஹ்ரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிந்தோரின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதே போல் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய நடக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இறந்தவர்கள் அனைவரின் உடலையும் ஒரே இடத்தில் தகவம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இறுதி சடங்கு செய்ய 29 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 29 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடலை இறுதி சடங்கு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இறுதி சடங்குகளுக்கான அனைத்து செலவுகளையும் சம்மந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.