15 வருடங்களுக்கு முன் கலாசேத்ரா நிறுவனத்தில் நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக முன்னாள் மாணவி புகார் அளித்துள்ளதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலாஷேத்திரா பாலியல் புகார்
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பரதநாட்டியம் கற்று வருகின்றனர். இந்த கல்லூரி மீது அவ்வப்போது பாலியல் புகார்களும் கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக உதவிப்பேராசியர் ஹரிபத்மன் மீது அங்கு பயிலும் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும் ஹரிபத்மனை கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மீண்டும் ஒரு பேராசிரியர் மீது புகார்
உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவிகளுக்கு பல வகைகளில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி வகுப்பு என்று தனது வீட்டிற்கு அழைத்து மாணவிகளை சீரழித்துள்ளதாகவும், மேடை கச்சேரி ஏற்றுவதாக மாணவிகளை ஹரிபத்மன் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனது ஆசைக்கு இணங்காத மாணவிகளை அவர் தேர்வு மதிப்பெண்கள் மூலம் பழிவாங் கியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஹரி பத்மனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், மீண்டும் ஒரு மாணவி கலாசேத்ரா பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளார். அந்த மாணவி வெளிநாட்டில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 15 வருடங்களுக்கு முன் நடன பேராசிரியர் ஸ்ரீஜித், மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
முன்னாள் பேராசிரியர் கைது
தற்போது ஸ்ரீஜித் கலாசேத்ராவில் பணிபுரியவில்லை அவர் அடையாறில் தனியாக நடன பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுத்து வருகிறார். நேற்று அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் கலாசேத்திராவில் முன்னாள் மாணவி அளித்த புகாரில் முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.