கஜா புயலின்போது களமிறங்கிய எம்எல்ஏ…. நள்ளிரவில் குழுவினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி…..

By Selvanayagam PFirst Published Nov 16, 2018, 10:06 AM IST
Highlights

கஜா புயல் நாகை மாவட்டத்தை பதம் பாத்துவிட்ட நிலையில் மாவட்டம்  முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி புயல் கரையைக் கடந்து கொண்டிருந்தபோது தொகுதி முழுவதும் தனது குழுவினருடன் பயணம் செய்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். விடிய விடிய அவர் செய்த பணிகளை பார்த்த  பொது மக்கள் அவரைப் பாராட்டினர்,

கஜா புயல் நேற்று  நள்ளிரவு மணி 1 அளவில் நாகை முதல் வேதாரண்யம் வரை கோரத் தாண்டவம் ஆடியது. சூறாவளி காற்று வாகனங்களை புரட்டிப் போடும் அளவுக்கு வீசியது. மழை கொட்டியது. நாகை நகரின் வீதிகள் விளக்குகள் இன்றி இருள் கவ்வி மிரட்டியது.

அந்த நிலையிலும் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் , மீட்புக் குழுவினர்  துணிச்சலாக காரில் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம், GVR திருமண மண்டபம், சின்மயி பள்ளி, சகுந்தலா ராமசாமி மண்டபம், ஏஎஸ்ஏ மண்டபம், கீச்சாங்குப்பம் பள்ளிக்கூடம், அக்கறைப்பேட்டை ஆகிய இடங்களுக்கு , அதிகாரிகளுடன் சென்று மக்களை சந்தித்தனர்.  குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். அரசு மருத்துவ மனைக்கு சென்று ,அனைவரையும் தயார் நிலையில் இருக்குமாறு  கூறினார்.

அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்று மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என அவர்களிடம் தமிமுன் அன்சாரி கேட்டறிந்தார்.

அப்போது புயல் 80 முதல் 120 கி.மீ வேகத்தில் கோரமாக வீசியது. வாகனங்கள் புரளும் அளவுக்கும், மனிதர்களை தூக்கும் அளவுக்கும் வீசத் தொடங்கியது. யாருமே அங்கு  நிற்க முடியவில்லை. அங்குள்ள மீனவ மக்கள் எம்எல்ஏவை  உடனே புறப்படுங்கள் என வலியுறுத்தினர். இதையடுத்து சற்று நேரத்தில் மரங்கள் விழத் தொடங்கியது. விளம்பர பலகைகளும், தகரங்கரம் பறப்பதை பார்த்த அனைவரும் பதறி விட்டனர்.

நள்ளிரவு  1:30 மணிக்கு சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து, பேரிடர் துறை அமைச்சர் உதயகுமார் தமிமுன் அன்சாரியைத் தொடர்பு கொண்டு, புயல் காலை 6 மணி வரை தாக்கக் கூடும் என்பதால், உடனடியாக முகாமுக்கு திரும்புமாறு கூறினார். அப்போது அங்குள் நிலைமையை விளக்கி உதவி கோரினார்.

உயிரை பணயம் வைத்து, கடும் புயலில்,நள்ளிரவில் மக்களுக்கு தைரியமூட்டும் வகையில் செய்லபட்ட தமிமுன் அன்சாரியின் செயல்பாடுகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

click me!