
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த மனுவை விசாரனை செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடகோரிய வழக்கை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22-ஆம் தேதி செல்வவினாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்மனு அளித்தார்.
அந்த மனுவில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
செல்வவினாயகத்தின் இந்த புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில் தனது புகாரை பதிவு செய்து விசாரணை செய்ய தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரினார்.
இதுகுறித்த வழக்கு சைதாபேட்டை நீதிபதி மோகனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் நிலையத்தில் யாரொருவர் புகார் தொடுத்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.