
நடுவர் நீதிமன்றத்திற்கு எதிரான காவிரி வழக்கை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடக வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைத்தார்.
அதைதொடர்ந்து காவிரி வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு திருப்பி அனுப்பப்படமாட்டாது எனவும் முழுமையான விசாரணையும் உத்தரவுகளையும் உச்சநீதிமன்றமே விதிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நடுவர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை நீதிமன்றத்தில் வைக்க வேண்டாம் எனவும் நடுவர் மன்றத் தீர்ப்பில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இன்று இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மேலும் கர்நாடகா ஜூலை 18 ஆம் தேதி தனது தரப்பு வாதங்களை கண்டிப்பாக முன்வைக்க வேண்டும் எனவும், புத்தகங்களில் உள்ளது போன்று மட்டுமே காவிரி பிரச்சனையை அனுக முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிதர்சனமான உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.