
ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க தவித்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு, அதில் இருந்து பல ஆயிரங்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையத்தில், நேற்று காலை பெண் ஒருவரும், சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசாருடன் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்ல, அறந்தாங்கி செல்லும் பேருந்தில் ஏற முயன்றார்.
அப்போது, அந்த பெண், இளைஞரை அடையாளம் காட்ட, அங்கு நின்றிருந்த போலீசார் அந்த இளைஞரை பிடித்து கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, போலீசார் ஒருவர் கூறும்போது, பல நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் பெண் ஒருவர், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க சென்று, பணம் எடுக்கத் தெரியாமல் அந்த இளைஞரிடம் உதவி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞரும் பணம் எடுத்து கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் அதிகளவு பணம் இருப்பதைக் கண்ட இளைஞர், தன்னுடைய ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு, பெண்ணின் கார்டை எடுத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அந்த இளைஞரை தற்போது கைது செய்துள்ளதாக அவர் கூறினார். பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து பல ஆயிரங்கள் எடுத்துள்ளதாகவும் கூறினார். இது குறித்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.