
இந்த ஆண்டு தீபாவளி டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயித்துள்ளீர்கள் எனவும், திட்டமிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் என்ன அரசியல்வாதிகளா எனவும் உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
டாஸ்மாக்குக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேலும் நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக் கடைகளை தமிழக அரசு ஊருக்குள் மாற்ற முயற்சி செய்து வருகிறது.
இதனால் பல மதுக்கடைகள் சூரையாடப்படுகின்றனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்ற்ன.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
இந்த ஆண்டு தீபாவளி டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயித்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு டாஸ்மாக் இலக்கை நாங்கள் நிர்ணயிப்பது இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதைதொடர்ந்து பேசிய நீதிபதிகள் சிறுவர்களுக்கு மது விற்கபடுவது குறித்து புகார் வரும் வரை காத்திருக்க வேண்டாம் எனவும், சிறுவர்களுக்கு மது விற்கப்பட்டால் உடனடியாக வலைதளங்களில் பரவி விடுகிறது எனவும் குறிப்பிட்டனர்.
சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியானால் அதை ஆதாரமாக கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2 தலைமுறையை அழிக்கும் வகையில் டாஸ்மாக் விஷம்போல் பரவி உள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.
இப்போது டாஸ்மாக் கடையை மூடினால் தான் அடுத்த 2 தலைமுறைக்கு பிறகு வருபவர்களை காக்க முடியும் எனவும், டாஸ்மாக்குக்கு எதிரான மக்களின் போராட்டத்தை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.
திட்டமிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் என்ன அரசியல்வாதிகளா? என சரமாரி கேள்விகளை எழுப்பினர்.