
பரமக்குடி
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறா 8-ஆம் தேதி ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரமக்குடி நகர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார்.
இராமநாதபுரம் ஆர்.ஜி.ரெத்தினம், திருப்புல்லாணி முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் நாகசாமி, உமர்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமுரளி அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர் பேசியதாவது:
“தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மயுத்தம் தொடங்கி உள்ளது. இது நிச்சயம் வெற்றி பெறும்.
எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்டவர் ஜெயலலிதா. அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு அவருக்குத்தான் உள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 8–ஆம் தேதி இராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று தர்மத்தின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட வேண்டும். மக்கள் சக்தி முன்பு குடும்ப அரசியல் தூள்தூளாகிவிடும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி மலரும்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் இராமநாதபுரம் முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை முன்னாள் நகர்மன்ற தலைவர் இம்பாலா உசேன், மண்டபம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், முதுகுளத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் விசுவநாதன், தாழையடிகோட்டை துரைசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.