
வடகாடு
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் 18-வது நாளாக போராடி வருகின்ற நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளனர் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்‘ எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்ட களத்தில் அமர்ந்துள்ள கிராம மக்களுடன் இணைந்து இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, வெளியூர்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், சமூகநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து நெடுவாசலில் போராடி வரும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவைச் சேர்ந்த 11 பேர் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரினர்.
அதன்பிறகு நெடுவாசலுக்கு வந்த போராட்டக்குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடலாமா? அல்லது அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாமா? என ஆலோசனை நடத்தினர்.
அப்போது போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நெடுவாசல் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், கோட்டைக்காடு கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அளித்த உறுதியை ஏற்ற கிராமத்தினர் மட்டும் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் நேற்று 18-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்த நிலையில் போராட்டம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, ஏற்கனவே இருந்த 11 பேர் கொண்ட குழுவினருடன் மேலும் சிலரை சேர்த்து புதிதாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த போராட்டக் குழுவினர் நேற்று முன்தினம் மதுரைக்குச் சென்றனர். அங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரையும் சந்தித்து பேசினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டக்குழுவினர் மீண்டும் நெடுவாசலுக்கு திரும்பினர். தொடர்ந்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இந்தநிலையில் 18-வது நாளான நேற்று காலை முதலே போராட்டம் நடைபெற்று வரும் நாடியம்மன்கோவில் குளக்கரை பகுதியில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் திரண்டனர்.
தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நடிகரும், பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சண்முகம், குட்டிப்புலி திரைப்பட நடிகர் ராஜசிம்மன் ஆகியோரும் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு அளிப்பதற்காக அரிசி மூட்டைகள், மற்றும் காய்கறிகளை எடுத்து வந்தனர்.
புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடியில் இருந்து பள்ளிவாசல் ஜமாத்களை சேர்ந்த இஸ்லாமியர்களும் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவ்வப்போது கிராமிய இசைக்குழுவினரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பாடல்கள் மூலம் போராட்டக்களத்தில் அமர்ந்து இருந்த மக்களின் முன்பு பாடினார்கள்.
போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரையில் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு பிரதான சாலையில் தகர கொட்டகை பந்தல் அமைத்து நேற்று முதல் கிராமமக்கள் அறப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதி கூறியது:
“பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 4-ஆம் தேதி நாங்கள் மதுரைக்கு சென்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது அவரிடம், “ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் எங்கள் பகுதி பாலைவனமாக மாறிவிடும். எங்கள் பகுதியில் ஒட்டு மொத்த தமிழகத்துக்கே சோறு போடும் அளவுக்கு விவசாயம் நடந்து வருகிறது. ஆகவே இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம்” என்று வலியுறுத்தினோம்.
அவருடன் இருந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் 4 பேரிடமும் இந்த திட்டத்தினால் வர இருக்கும் ஆபத்துகள் பற்றி விளக்கி கூறினோம். அதற்கு அவர்கள், “இந்த திட்டம் குறித்து அந்த பகுதி மக்களிடம் ஆட்சியர் மூலம் கருத்து கேட்க கூறி இருக்கிறோம். அதுவரை இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” என்றனர்.
அப்போது அவர்களிடம் இந்த திட்டத்தை கொண்டு வருவது போல் நீங்கள் பேசினால் உங்களிடம் பேச தயாராக இல்லை என்று கூறிவிட்டு, மீண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வருகிற 9-ஆம் தேதி பாராளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. வரும் 10 அல்லது 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி பெற்று தருகிறேன். அங்கு உங்கள் போராட்டக்குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் டெல்லி வந்து பிரதமரையும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, உங்களது கோரிக்கை குறித்து தெரிவியுங்கள் என்று தெரிவித்தார்.
நாங்கள் பிரதமரை சந்தித்தாலும், எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்ற கோரிக்கையை தான் வலியுறுத்துவோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம்.
அதனைத் தொடர்ந்து எங்கள் போராட்டக்குழுவை சேர்ந்த யாரெல்லாம் பிரதமரை சந்திக்க செல்வது, எந்த தேதியில் செல்வது என்பது குறித்து 100 கிராம முக்கியஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு அறிவிப்போம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.” என்று பிரதிநிதிகள் கூறினர்.