
கோட்டைப்பட்டினம்
தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “வறட்சியால் விவசாயிகள் தற்கொலைசெய்து கொள்வது போல, இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்” என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சனிக்கிழமை அன்று 168 விசைப்படகுகளில், 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்லன்செட்டி மகன்கள் பிரதீப் (22), அருண் (18), ராமகிருஷ்ணன் (58), சேகர் (50) ஆகிய நான்கு பேரும், சிவராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மாரிக்கண்ணு மகன் சத்யராஜ் (27), செல்வராஜ் (55), கண்ணையன் (40), செல்வம் (30), ரெத்தினம் (35) ஆகிய ஐந்து பேரும், ஆக மொத்தம் இரண்டு விசைப்படகுகளில் ஒன்பது மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்தில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒன்பது மீனவர்களையும் 2 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர்.
பின்னர் அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 9 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர்.
இதில் செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகை ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கையில் வைத்துள்ளனர்.
தற்போது அவரிடம் இருந்த மற்றொரு விசைப்படகும் சிறை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் கடலில் வீசியிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன் மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த வின்னரசன், தூதர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் ஆலன், ராஜன், நாகராஜன், மெல்ராஜ், சேசில், லூயிசன், சீலிஸ், பூண்டிராஜ், நிசாந்த், முருகன், தீபன், சாக்கோ, ரூபன், இன்பம், அந்தோணி ஆகிய 15 பேரையும் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து போய்விடும். வீட்டில் இருந்த நகை, பத்திரம் ஆகியவற்றை அடமானம் வைத்து ஒரு புதிய விசைப்படகு வாங்கி கடலுக்குச் சென்றால் மீண்டும் அதையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைக்கின்றனர். மீனவர்களை கைது செய்து இலங்கை கொண்டு சென்றுள்ளனர்.
இனிமேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தம் கிடையாது. விசைப்படகுகளையும், அதில் சென்ற மீனவர்களையும் விடுவிக்காவிட்டால், விவசாயிகள் தற்கொலை போல, மீன்வர்கள்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் ” என்ற் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.