செந்தில் பாலாஜியை விட்டுக் கொடுக்காத ஸ்டாலின்: அடுத்த மூவ்!

By Manikanda Prabu  |  First Published Jun 16, 2023, 7:52 PM IST

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையை கூடுதலாகவும்,  அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என கூறி, Misleading and Incorrect என குறிப்பிட்டு இலாக்கா மாற்ரம் தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும்  ஆளுநருக்கு இலாக்கா மாற்றம் தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். ஒருவேளை ஆளுநர் ஏற்க மறுக்கும்பட்சத்தில் தமிழக அரசு தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை ஏற்று, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை‌, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனிக்கவும், மதுவிலக்குத் துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆனால், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் தொடர கூடாது என்பதால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 8 நாட்கள் விசாரிக்கலாம்.. ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த நிலையில், அவர் அமைச்சராக தொடர்வது குறித்து நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அமைச்சராக தொடர்வார் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல், அவரை 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, செந்தில் பாலாஜியை வரும் 23ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் வைத்தே விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

click me!