
ஜெயலலிதாவின் கான்வாயை கவனித்திருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சந்தேகம் எழுந்திருக்கிறது.
அதாவது அவர் முதல்வராக இருந்தாலும் சரி! இல்லாத நிலையிலும் சரி! அவரது கான்வாயில் (பாதுகாப்பு கார்களின் அணிவகுப்பு) சர்வ நிச்சயமாக ஹைடெக் வசதியுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் இருக்கும். அதில் தேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இருப்பார்கள். தொடர்ந்து இரண்டு முறை ஜெ., இருமிவிட்டாலும் கூட இந்த தகவல் அவர்களுக்கு பாஸ் செய்யப்பட்டு, அவர்களும் ஒரு சின்ன பிரேக்கில் அவரை பரிசோதித்துவிட்டு செல்வார்கள்.
ஜெ.,வின் பாதுகாப்பு அம்சங்களில் மருத்துவ வசதியும் மிக முக்கிய இடத்தை பெற்றது.
இந்நிலையில் 2016 செப்டம்பர் 22_ம் தேதி இரவில் ஜெயலலிதாவுக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டபோது ஆம்புலன்ஸ் அவரது போயஸ் இல்லத்தில் இல்லையா? எதற்காக அப்பல்லோவுக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொண்டு வர சொன்னார்கள்? அதீத பாதுகாப்பில் இருக்கும் ஒரு முதல்வரின் ஆகப்பெரிய பங்களாவில் அவரது அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸை நிறுத்தாமல் போய்விட்டார்களா? அல்லது அந்த ஆம்புலன்ஸ் இருந்தும், அதில் அவரை அழைத்துச் செல்ல வேண்டாமென்று அப்பல்லோவுக்கு போன் செய்யப்பட்டதா? ஜெயலலிதாவின் வீட்டில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு இருந்ததா இல்லையா?...என்பது உள்ளிட்ட கேள்விகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
தமிழகத்தின் செய்தி சேனல் ஒன்று ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிகப்பட்ட அன்று தயாரிக்கப்பட்ட ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’டை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் இந்த ஆம்புலன்ஸ் டவுட்டை விமர்சகர்கள் கிளப்பியுள்ளனர்.
’அந்த ரிப்போர்ட்டின் படி ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்திருக்கிறது. அவ்வளவு அதிகாரம் படைத்த முதல்வரின் வீட்டில் அவரது சுகர் அளவை கண்காணிக்கும் சர்க்கரை மெஷின் இல்லையா? இருந்திருந்தால் கவனித்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களே!
அதேபோல் அவரது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவும் மிக மிக குறைவாக இருந்திருப்பதாக ரிப்போர்ட் சொல்கிறது. முதல்வரின் வீட்டில் மருத்துவ குழு இருந்திருந்தால் இதை கவனித்து உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசத்துக்கு வழி செய்திருப்பார்களே?’ என்று கேட்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை.
உயர் நடுத்தர குடும்பங்களில் கூட வயதானவர்களின் தேவைக்காக ஹோம் நர்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் போன்றவை இருக்கும் நிலையில். ஜெயலலிதா அம்மையாருக்கு அந்த வசதிகள் வழங்கப்படாமல் போய்விட்டதா? என்று இதையே விமர்சகர்களும் கேட்கிறார்கள்.
அதேபோல் பேஷண்ட் கேர் ரிப்போர்ட் சொல்வது படி அவரது இரத்த கொதிப்பின் அளவு 140/70 என்று இருந்திருக்கிறது. இது நார்மலான பி.பி. அளவுதான். ஆனால் ரிப்போர்ட் சொல்வதுபடி அவருக்கு நினைவு தப்பிய நிலையில், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த நிலையில் படுத்திருந்தார் என்றால் பி.பி. எப்படி நார்மலா இருந்திருக்க முடியும்! வெகுவாய் இடிக்கிறதே?! என்கிறார்கள்.
ஒருவேளை பி.பி. அளவீடு தவறாக குறிக்கப்பட்டுவிட்டது என்றால், சர்வதேச தரத்தை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் இப்படியா மருத்துவர்களும், செவிலியர்களும் இருப்பார்கள்! என்றும் கேள்விகள் வெடிக்கின்றன.
ஆக...ஜெயலலிதாவின் பேஷன்ட் கேர் ரிப்போர்ட்டை வெளியிட்டதன் மூலம் ஏதோ விஷயங்களை தெளிவுபடுத்துவதாக நினைத்து ஏகப்பட்ட டவுட் சுழலில் சிக்கியிருக்கிறது ஒரு டீம். இதைத்தான் பிள்ளையார் பிடிக்க போய்....என்பார்களோ!