
புதுயுகத் தொழில்களை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் பல்வேறு முன்னோடி செயல் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய செயல்திட்டங்களை நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான லீடர் (leader) அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) அமைப்பு நமது தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
இதையும் படிங்க: உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!
புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதை, அண்மையில் ஆய்வறிக்கை கூறியதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். தொழில்கள் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்து இருப்பதிலும் (ease of doing business) பதிமூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தி இருக்கிறோம். புதுயுகத் தொழில்களை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் பல்வேறு முன்னோடி செயல் திட்டங்களை நமது அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டது நமது அரசு. அதில் தொழில்துறை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் அது பரவ வேண்டும். புத்தாக்கத் தொழில்கள் அனைத்தும் சிறக்க வேண்டும். இதற்காக, புத்தொழில் மற்றும் புத்தாக்கத் துறையிலும் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்பட ஏதுவாக வட்டாரப் புத்தொழில் மையங்கள் மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை... நாளை நடைபெற இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் பொருட்டு 30 கோடி ரூபாய் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் மானியங்களில் பெண்களுக்கும், இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நோக்கத்துடன் 100 கோடி ருபாய் நிதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றம் காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தரும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் பொருட்டு, ஆயிரம் கோடி ரூபாய் பசுமை நிதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்களும் பெருமளவில் பங்கு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.