நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலாக தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சந்தானபாரதிக்கு பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குவியும் பாஜக தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகத்தில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதே போல மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, ராஜ்நாத் சிங் என அடுத்தடுத்து தீவிரமாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர்.இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிரச்சாரத்தை தமிழகத்தில் தொடங்கவுள்ளார். முதலில் சிவகங்கை தொகுதியிலும், நாளை மதுரை மற்றும் கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
சந்தான பாரதிக்கு போஸ்டர்
இந்தநிலையில் பாஜகவினர் அமித்ஷாவை வரவேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் ஒரு சில இடங்களில் அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலாக பிரபல தயாரிப்பாளரும். நடிகருமான சந்தானபாரதி புகைப்படத்தை ஒட்டிபோஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சந்தான பாரதி பார்ப்பதற்கு அமித்ஷாவை போல் இருப்பதால் இந்த போஸ்டர் மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதிக்கு போஸ்டர் அச்சடிக்கப்பட்டது நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இந்தநிலையில் மீண்டும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதனை கிண்டல் செய்து கார்திக் சிதம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சந்தானபாரதி பேன் கிளப் என பதிவு செய்து போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
Santhana Bharati Fan Club :) pic.twitter.com/Rxm6ye2rV6
— Karti P Chidambaram (@KartiPC)போஸ்டரை ஒட்டியது யார்.?
அதே நேரத்தில் இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டவில்லையென்றும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தான் போஸ்டரை அச்சடித்து ஒட்டியிருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரில் பாஜகவினர் யாரும் பெயரும் குறிப்பிடாமல் மொட்டை போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.