திருப்பூரில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து வேட்பாளரிடம் கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் நேற்று மாலை நேரத்தில் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் தையலகம் வைத்து நடத்தி வரும் பெண் ஒருவர் பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருளான நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் வேட்பாளரின் உடன் இருந்த பாஜக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ஆனால் வேட்பாளர் முருகானந்தமோ அதனை கண்டும், காணாமல் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
வேட்பாளர் அந்த பகுதியை கடந்து செல்லும் வரை அமைதி காத்த பாஜகவினர். உடனடியாக அப்பெண்ணின் கடை முன்பாக சூழ்ந்து கொண்டு பெண்ணிடம் மிகவும் ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அப்பெண் வீடியோவாக பதிவு செய்ய முயற்சித்த நிலையில், அத்துமீறி செல்போனையும் பிடிங்கி எறிந்துள்ளனர். மேலும் ஜிஎஸ்டியால் உனக்கு என்ன பிரச்சினை, நீ எப்படி வேட்பாளரிடம் கேள்வி கேட்கலாம், வேட்பாளரின் வாகனத்தை நீ எப்படி மறிக்கலாம், ஜிஎஸ்டியால் உனக்கு என்ன பிரச்சினை என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு மிரட்டி உள்ளனர்.
என்னை கண்டால் பிரதமர் மோடி பயப்படுவார்; பிரசாரத்தில் ஆ.ராசா பரபரப்பு பேச்சு
தொடர்ந்து அப்பெண், பாஜகவினருடன் வாதம் செய்யவே ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் கடையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இவை அனைத்தும் அப்பெண்ணின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜிஎஸ்டி குறித்து வேட்பாளரிடம் கேள்வி எழுப்பியதற்காக பெண் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.