
எல்லை பிரச்சனையை காரணம் கட்டி, புகாரை வாங்க மறுத்ததுடன், புகார்தாரரான இளம்பெண்யை அலைக்கழிப்பு செய்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் அடுத்த டிவிஎஸ்நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஹெலன் கிறிஸ்டியனா (30). ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டினா தினமும் வேலைக்கு மொபட்டில் செல்வது வழக்கம்.
கடந்த 17ம் தேதி இரவு கிறிஸ்டினா, வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், கிறிஸ்டினா கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தோள்பட்டை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இதுதொடர்பாக திருவேற்காடு போலீசில், கிறிஸ்டினா புகார் செய்தார். அப்போது, சம்பவம் நடந்த பகுதி, நொளம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்டது. அதனால், அந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் கூறியுள்ளார்.
அதன்பேரில், நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, தங்களது எல்லை இல்லை என்றும், எல்லை குறித்த அடையாளங்களோடு நொளம்பூர் போலீசார், கிறிஸ்டினாவிடம் கூறி, மீண்டும் திருவேற்காடு போலீசாரிடம் புகார் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து மீண்டும் திருவேற்காடு காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், புகாரை வாங்காமல் அவரை அலைக்கழித்துள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த கிறிஸ்டினா, மாநகர கமிஷனரிடம் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து, உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், கிறிஸ்டின கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், நகையை பறிகொடுத்த இளம்பெண், வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அவரை இன்ஸ்பெக்டர் அலைக்கழித்துள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி அவர், மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
கமிஷனர் உத்தரவின்பேரில், மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். அதில், திருவேற்காடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், எல்லை பிரச்சனையை காரணம் காட்டி புகாரை வாங்க மறுத்ததும், புகார்தாரரான இளம்பெண்ணை அலைக்கழித்ததுதும் உறுதியானது.
இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். எல்லை பிரச்சனையை காரணம் காட்டி, புகார்தாரரை அலைக்கழித்த இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.