
திருவள்ளூர்
பொன்னேரியில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில் 82 பள்ளி வாகனங்களில் 70 வாகனங்களுக்கு தகுதி சான்று அளித்தனர் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்னும் சில தினங்களில் திறக்க இருக்கிறது. அதனால், அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தனியார் பள்ளி வாகங்கள் சரியாக இருக்கிறதா என்ற ஆய்வு நடத்தப்படுகிறது. அரசு விதிகளின் படி இருக்கிற வாகனங்களுக்கு சான்று அளித்து அவற்றை தொடர்ந்து இயக்கவும், விதிகளின்படி இல்லாத வாகனங்கள் அவற்றை சரி செய்துவிட்டு சான்று பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 தனியார் பள்ளிகளின் 82 வாகனங்களை செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, அரசு விதிகளைப் பின்பற்றி இருந்த 70 வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரசு விதிகளை பின்பற்றாமல் இருந்த 12 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
தகுதிச் சான்றிதழ் வழங்கப்படாத வாகனங்கள், பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு விதிகளைப் பின்பற்றி சீர் செய்த பிறகே அந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இந்த ஆய்வின்போது, பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி உடனிருந்தார்.