Omicron : ஒமைக்ரானை சந்திக்க தயாரான திருச்சி… பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 8:04 PM IST
Highlights

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். 

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக, மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக, மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஓமைக்ரான் பரிசோதனை குறித்து தீவிர ஆய்வுசெய்து வருகின்றனர் என்றும்,  திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஓமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் ஐசியுக்கு என தனியா 8 படுக்கைகளும், மீதம் உள்ள 24 படுக்கைகளும் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நேற்று இரவு 10.45 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தொடர்ந்து, அவரது சளியின் மாதிரி சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த நபர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஓமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் முதல்வர் வனிதா தெரிவித்தார். மேலும், கொரோனா முதல் மற்றும் 2ஆம் அலை பரவலை விட தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் கொடிய தொற்று நோயாக உள்ளதாக கூறிய வனிதா, இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

click me!