தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அண்மையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் இன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, உள் கர்நாடகா மற்றும் மாஹே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு மத்திய பிரதேசம், ஜார்கண்டில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும், பஞ்சாப், அரியானா, பிஹார், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு. மூன்று தினங்களில் மத்திய அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளிலும், மீதமுள்ள கர்நாடகாவின் சில பகுதிகளிலும், கடலோர ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகள், தெலங்கானா, தெற்கு சட்டிஸ்கரின் சில பகுதிகள், தெற்கு ஒடிசா, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் நிலவிக் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.