Bharat Gaurav Train ticket price ; விமான பயணத்திற்கு இணையாக தனியார் ரயில் பயண கட்டணம்.! அதிர்ச்சியில் பயணிகள்

By Ajmal KhanFirst Published Jun 14, 2022, 12:17 PM IST
Highlights

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இன்று  கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

முதல் தனியார் ரயில் இன்று இயக்கம்

 ரயில்கள் தனியார் மயமாக்க படுவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள், ஆதரவு என கலவையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் தனியார் ரயில் சேவை கோவையிலிருந்து இன்று தொடங்க உள்ளது. ரயிலின் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் தனியார் செய்துள்ளது.  கோவையிலிருந்து ஷீரடிக்கு, தனியாரால் நிர்வகிக்கப்படும் இந்த ரயில் இன்று(14-06-22) முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரயிலில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.  இப்பணியை, தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர், போத்தனூர் ரயில் நிலையத்தில் பார்வையிட்டனர். பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு, பொது மேலாளர் ஆலோசனை வழங்கினார். ரயிலில் வழங்கப்படும் பெட் ஷீட், துண்டு, டூத் பேஸ்ட், ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். பயணியருக்கு தரப்படும் உணவு வகைகள், அளவு குறித்தும் கேட்டார். சேலம் கோட்ட  அதிகாரிகளும் இந்த ஆய்வின்போது இருந்தனர்.இந்த நிலையில் ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த ரயில் புறப்பட உள்ளது. இந்த ரயில் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் பெங்களூர் மற்றும் மந்திராலயம்  சீரடி வரை செல்கிறது. 

இரண்டு வகையான கட்டணம்

இந்த ரயிலுக்கான கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பேக்கேஜ் கட்டணம், வழக்கமான டிக்கெட் கட்டணம் என இரண்டு வகைகளில்  கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் முதல்தர ஏசி ₹10000, இரண்டாம் தர ஏசி ₹7000, மூன்றாம் தர ஏசி ₹5000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத sleeper க்கு ₹2500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே பேக்கேஜ் கட்டணங்களை பொறுத்தவரையில் முதல்தர ஏசி ₹12999, இரண்டாம் தர ஏசி ₹9999, மூன்றாம் தர ஏசி ₹7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத sleeper க்கு ₹4999என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டிக்கெட் கட்டணத்தை விட பிரிவிற்கு ஏற்ப  மூன்றாயிரம் ரூபாய் அதிகம். சீரடியில் சிறப்பு தரிசனம், மூவர் தங்கும் ஏசி ரூம் வசதி, பயண வழிகாட்டி மற்றும்  இன்ஷூரன்ஸ் ஆகியவை இந்த பேக்கேஜ் முறையில் அடங்கும். உணவு மற்றும் பெங்களூரை அடுத்த ஆலய தரிசனம் இந்த பேக்கேஜில் வராது என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மாணவி திடீர் உயிரிழப்பு...! தலையில் அடித்து கதறும் பெற்றோர்

click me!