
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில், ஏப்ரல் மாதம் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 இலட்சத்து 18 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவின்படியும், உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப்பிரியா அறிவுரையின்படியும், திருவண்ணாமலை போக்குவரத்து ஆய்வாளர் கனி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சண்முகம், நாராயணன் மற்றும் போக்குவரத்து காவலாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களாக அவலூர்பேட்டை சாலை, மணலூர்பேட்டை சாலை, செங்கம் சாலை, போளூர் சாலை, தேரடிவீதி, மாடவீதி, பேருந்து நிலையம் அருகில், ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், போக்குவரத்து விதிகளை மீறிய 8020 வாகனங்கள் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடந்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 2083 வாகனங்கள் மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளது.
அதன்படி அதிக பாரம் ஏற்றி வந்த 6 வாகனங்கள் மீதும், அதிக வேகமாக சென்ற 214 வாகனங்கள் மீதும், அதிக உயரம் பாரம் ஏற்றிச்சென்ற 22 வாகனங்கள் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச்சென்ற 380 பேர் மீதும், வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஐ.என்.டி. என பதிவு செய்திருந்த 337 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 1837 பேர் மீதும், அனுமதி மறுக்கப்பட்ட (நோ என்ட்ரி) பாதை வழியாக வாகனங்களில் சென்ற 521 பேர் மீதும், இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த 552 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் (நோ பார்க்கிங்) வாகனங்கள் நிறுத்திய 206 பேர் மீதும், சீருடை அணியாமல் வாகனங்கள் ஓட்டிய 666 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 221 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 466 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற 126 பேர் மீதும், சாலைகளில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிய 23 பேர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 8020 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.16 இலட்சத்து 27 ஆயிரத்து 110 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரலில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 இலட்சத்து 18 ஆயிரத்து 600 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.