பிரசாதத்துக்கும் வருகிறது காலாவதி தேதி! கோயில்களுக்கு அறிவுறுத்தல்!

First Published Jan 29, 2018, 2:54 PM IST
Highlights
In TamilNadu Temples the offerings are to be paid


தமிழக கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில், காலாவதி தேதியுடன் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை உள்ளிட்ட அறுபடை முருகன் கோயில்களில் பஞ்சாமிர்தமும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புட்டு, அழகர் கோயிலில் தோசை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் முறுக்கு, அதிரசம், லட்டு ஆகியவை பிரபலம். இதே போன்று பெரும்பாலான முக்கிய கோயில்களில் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் தரமற்ற வகையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது, இந்து அறநிலையத்துறைக்கும் இது குறித்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இதனைத் தொடர்ந்து, தமிழக கோயில்களில் பிரசாதங்களில் காலாவதி தேதியுடன் வழங்க வேண்டுமென அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், உணவு தரக்கட்டுப்பாட்டு மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்படும்.

அங்கு தர நிர்ணய சான்று வழங்கியதும், காலாவதி தேதி பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்படும். அதன் பிறகு ஸ்டால்களில் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது என்றார் அவர்.

click me!