
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய நித்தி சீடரை விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட்டார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், 293-வது மடாதிபதியாக நித்யானந்தாவை அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
சட்டவிரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பாக நித்தியானந்தா பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நித்தியானந்தா வழக்குக்கு பதில் தராமல் தொடரந்து வாய்தா வாங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு நீதிபதி மகாதேவ்ன் கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்தை மதிக்காமல் இருக்கும் நித்தியானந்தாவை இன்றே கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிடப்படும் என்றார்.
நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எதிராக பல புகார்கள் வருகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர், அவகாசம் கேட்டதை அடுத்து பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் நரேந்திரன், செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் நீதிமன்ற விசாரணை நிகழ்வுகளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி கொண்டிருந்துள்ளார். நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரனின் இந்த செயலைக் கண்டித்த நீதிபதி மகாதேவன் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.