
எப்போது பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை விமான நிலையத்தில், வாலிபர் ஒருவர் திடீரென அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் வருகை பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த சைதன்யா (30) என்ற இளைஞர், நின்று கொண்டிருந்தார். இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
அப்போது, சைதன்யாவுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. செல்போனை எடுத்து பேசிய அவர், திடீரென, 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்ததும் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து விமான நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சைதன்யாவின் உடலைக் கைப்பற்றி சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தினகரன், அரைக்கால் டிரவுசர் அணிந்துள்ளார். கைப்பை ஒன்றையும் அந்த வாலிபர் வைத்திருந்துள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். போலீசாரின் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில், அவர்களின் கண்காணிப்பையும் தாண்டி, பயணி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.