
தமிழக அரசின் நிதிநிலை திவாலாகும் நிலையில் இருக்கிறது என்று சட்டப் பேரவை காங்கிரசு கட்சியின் தலைவர் கேஆர்.ராமசாமி கூறியுள்ளார்.
காரைக்குடியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது நன்செய், புன்செய் நிலங்களுக்கு தனித்தனியாக வறட்சி நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறினார். அப்போது நான், இழப்பீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தேன். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. மாற்ற இயலாது என அதற்கு அவர் பதிலளித்தார்.
ஆனால் இப்போதைய முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு வழங்கியுள்ள அரசாணையின்படிதான் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியும் என்று கூறுகிறார்.
பன்னீர்செல்வம் கூறியதிலிருந்து முற்றிலும் மாறுதலான நிலைப்பாட்டை இந்த அரசு எடுத்திருக்கிறது. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி.
தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்து ஏழு மாதங்களாகி விட்டன. குடும்ப அட்டைகளுக்கான பொருள்கள் உள்பட எந்த நலத் திட்டங்களையும் சரிவர செயல்படுத்த முடியவில்லை.
இருப்பினும் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அரசின் நிதிநிலை திவாலாகும் நிலையில் உள்ளது. இதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை.
விவசாய உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ என்.சுந்தரம், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.மாங்குடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.