அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு; 125 சவரன் நகைகள் கொள்ளை…

 
Published : Feb 25, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு; 125 சவரன் நகைகள் கொள்ளை…

சுருக்கம்

சேலம்

சேலத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர் வீடுகளில் நடந்த திருட்டில் ரூ.25 இலட்சம் மதிப்புள்ள 125 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் (37). சேலம் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி சரண்யா. இவரும் தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

வழக்கம்போல சங்கர் மற்றும் சரண்யா ஆகியோர் நேற்று காலை 9 மணிக்கு மகனை பள்ளியில் விட்டுவிட்டு பணிக்குச் சென்றனர்.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் சங்கர் வீட்டில் வேலை செய்யும் சீதா என்ற பெண் அங்கு வந்தார். அப்போது சங்கர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் உடனே சரண்யாவிற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவரும், சங்கரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறிக் கிடந்ததையும், பீரோவில் இருந்த 45 சவரன் நகைகளும், ரூ.10 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதேபோல், சங்கர் வீட்டின் எதிரே முத்துராஜன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சதி. இவர்களுக்கு பிரபாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.

முத்துராஜன் கடந்த 22–ஆம் தேதியில் இருந்து தன்னுடைய மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக குடும்பத்துடன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் இவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துராஜன் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் உதவி ஆணையர்கள் மோகன், விஜய்கார்த்திக் ராஜ், அழகாபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பொன்ராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் துவக்கினர்.

மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மோப்ப நாய் சீதா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. இந்த நாய் மோப்பம் பிடித்து இரண்டு முறை முதல்மாடி வரை ஓடிச் சென்றது. பின்னர் அங்கேயே சுற்றி, சுற்றி வந்தது.

காவலாளர்களின் முதல் கட்ட விசாரணையில் நேற்று மதியம் இரண்டு மர்ம ஆசாமிகள் கொள்ளை நடந்த வீடுகளின் மாடியில் இருந்து கீழே இறங்கி செல்வதை சிலர் பார்த்தது தெரிய வந்தது.

இதனால் அவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தில் காவலாளர்கள் விசாரிக்கின்றனர்.

மேலும், இரண்டு வீடுகளிலும் ஆள் இல்லாத நேரத்திலேயே திருட்டு நடந்து இருப்பதால் இதனை திட்டமிட்டே செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர் காவலாளர்கள்.

இரண்டு வீடுகளிலும் கொள்ளைபோன 125 சவரன் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 இலட்சம் வரை இருக்கும்.

ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளைப் போன சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!