
தமிழக காவல் துறையில் உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் அது நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. உளவுத்துறை ஐஜி பதவி என்றாலே ஐபிஎஸ் அதிகாரிகள் காத தூரம் ஓடுகிறார்களாம்.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி , தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் பதவிக்கு அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள் மூவரும் மாநில முதலமைச்சரிடம் தொடர்பில் உள்ளவர்கள்.
இது தவிர சக்தி வாய்ந்த பதவி என்றால் அது மாநில உளவுத்துறை தலைவர் பதவி. ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி இதில் நியமிக்கப்படுவார். மற்ற துறைகளுக்கு அரசு தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை எடுத்தாலும் , மாநில உளவுத்துறை அதிகாரி பதவிக்கு மட்டும் தங்கள் நம்பிக்கைக்குரிய , தகுதியான திறமையான அதிகாரிகளை நியமிப்பார்கள்.
இப்படி நியமிக்கப்படும் உளவுத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுதும் திரட்டப்படும் தகவல்களை அரசுக்கு சாதக பாதகமான தகவல்களை திரட்டி அளிப்பது , மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது சொந்தக்கட்சிக்காரர்களை மனநிலை , செயல்பாடுகளை அறிந்து கொள்வது , எதிர்கட்சிகளை உடைப்பது , கருத்துக்களை உருவாக்குவது என பல வேலைகள் செய்துள்ளனர் இதற்கு முன்பிருந்த அதிகாரிகள்.
சில அதிகாரிகள் தங்களுக்கு இடப்பட்ட வேலைகளை மட்டுமே செய்து தங்கள் பணியை நிறைவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் , பின்னர் கண்ணப்பன், அம்ரிஷ் புஜாரி போன்றவர்கள் தங்கள் பணியை திறம்பட செய்தவர்கள் ஆவர்.
பெரும்பாலும் ஆளுகின்ற அரசுக்கு ஆதரவாக பல வேலைகள் செய்ய வேண்டும் என்பதால் இப்பதவிக்கு வரும் அதிகாரிகள் மீது தேவையற்ற முத்திரை குத்தப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டேவிட்சன் ஆசிர்வாதம் உளவுத்துறை ஐஜியாக இருந்தார்.
பின்னர் அவர் மாற்றப்பட்டு சத்திய மூர்த்தி நியமிக்கப்பட்டார். அவர் சசிகலா ஆதரவு அதிகாரி என பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அடுத்து ஓபிஎஸ் காபந்து அமைச்சராக இருந்தபோது கவர்னரால் மாற்றப்பட்டு மீண்டும் டேவிட்சன் ஆசிர்வாதம் வந்தார்.
அவர் வந்து 11 நாட்களுக்குள் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மீண்டும் மாற்றல் கேட்டு மீண்டும் பழைய பதவிக்கே சென்றுவிட்டார். காரணம் வீணாக தன்மீது எந்த பிரச்சனையும் வரக்கூடாது, நிலையில்லாத அரசாங்கத்தில் செயல்படுவதால் தன் மீது விழும் பழி அடுத்த அரசு வரும் போது தீராப்பழியாகும் என்று அஞ்சியதால் உடல்நிலையை காரணம் காட்டி சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.
அடுத்து இந்த இடத்திற்கு வருவதற்கும் எந்த ஐபிஎஸ் அதிகாரியும் விரும்பவில்லையாம். காரணம் எத்தனை மாதங்கள் இந்த ஆட்சி இருக்குமோ? இதில் நாம் இவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு சில காரியங்கள் செய்ய வேண்டி இருக்கும் இதனால் வீண் கெட்ட பெயர் தான் வரும் என்று யோசிக்கிறார்களாம்.
தற்போதைக்கு உளவுத்துறை தலைவர் பதவி நிரப்பப்படாமல் மூன்றாவது நாளாக அரசு இயங்குகிறது. விரைவில் இதற்கான அதிகாரி நியமிக்கப்படுவார். அது ஐஜி தாமரைக்கண்ணன் , அல்லது சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் ஸ்ரீதராக இருக்கலாஅம் என்கின்றனர்.