
சேலம்
சேலம் மாவட்டம் முழுவதும் 28 ‘மதுக்கடைகள் மற்றும் பார்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.
தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்.
அவர் மறைந்த பிறகு, முதல்வர் இடத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுச் செயலாளர் பதவி, அதிமுக கூட்டம் என ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர், சசிகலாவை முதவராக்க வேண்டும் என்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாம் குற்றவாளியான சசிகலா சிறைக்கு செல்லவே முதல்வர் இடத்திற்கு இடைப்பாடி பழனிச்சாமி வந்தார்.
ஜெயலலிதா முதற்கட்டமாக 500 ‘டாஸ்மாக்‘ கடைகள் மூடவும், செயல்படும் நேரத்தை இரண்டு மணிநேரம் குறைத்தும் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து தற்போதைய தமிழக முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்படுவதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த 28 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் கூறியது:
“சேலம் மாவட்டத்தில் தற்போது பொதுமக்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு பள்ளிகள், வழிபாட்டு தலங்களின் அருகே உள்ள ‘டாஸ்மர்க்’ கடைகள் மூடப்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம் மாநகரில் 6 ‘டாஸ்மாக்’ கடைகளும், ஓமலூர் – 4, ஆத்தூர் – 3, கெங்கவல்லி – 4, சங்ககிரி – 3, இடைப்பாடி – 2, சேலம் தாலுகா – 3, மற்றும் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர் ஆகிய ஊர்களில் தலா ஒன்று என மொத்தம் 28 கடைகள் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
சேலம் மாநகரில் உள்ள 6 டாஸ்மாக் மதுக்கடைகளை தனித்தாசில்தார் சுமதி முன்னிலையில் ஊழியர்கள் நேற்று நிரந்தரமாக மூடினார்கள். மேலும் அந்த கடைகளின் ஷட்டரில், ‘‘டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது, நிரந்தரமாக மூடப்பட்டது‘‘ என எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பாடா நம்ம பணம் மிச்சம்டா என பேசிக் கொண்டு செல்வதையும் கேட்க முடிந்தது.
மது வெறியர்களோ, இந்த கடை இல்லைனா இன்னொரு கடை என்று அடுத்த கடையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.