தமிழகத்தில் வருகின்ற 20ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் சிக்னலை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருவதால் நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது.
இதனிடையே கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டு இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.