"ஒட்டுமொத்த ஐஐடி நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவாக செயல்படுகிறது" - மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

First Published Jun 1, 2017, 3:58 PM IST
Highlights
iit students pressmeet


மாட்டிறைச்சி விவகாரமும், அதனை முன்வைத்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தி வரும் போராட்டமும் ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபரப்பாக்கியுள்ளது. 

விலங்குகள் வதைபடுவதை தடுப்பதாகக் கூறி கால்நடை வர்த்தகத்தில் மத்திய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே இனி சந்தையில் மாடுகளை விற்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில், சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மாட்டிறைச்சி விருந்தை நேற்று முன்தினம் இரவு நடத்தினர். இதனைத் தொடர்ந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று விருந்து நடத்திய சூரஜ் என்பவரை கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தாக்குதலுக்கு உள்ளான சூரஜ் சார்பாக மாணவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது, "மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா மிகவும் அமைதியாகவே நடத்தப்பட்டது. சூரஜ் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். 

"தாக்குதல் நடத்திய மாணவர் மணீஷ் ஏற்கனவே பலருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.  அவரின் இந்நடவடிக்கைகள் குறித்து பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சூரஜை தாக்கிய மணீஷின் கை உடைந்தது போல் நாடகமாடுகின்றனர். ஐ.ஐ.டி.நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.

இது தொடர்பாக கல்லூரித் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருப்தி அளிக்கும் வகையில் பதிலளிக்கவில்லை." இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவர்கள் தெரிவித்தனர்.

click me!