
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸில் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு புகை வருவதை அறிந்த அந்நிறுவனக் காவலாளிகள் இது குறித்து தீயணைப்பு படைக்குத் தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு 11 வண்டிகளில் வந்த மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
ஆனால் கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்ததால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் தியாகராய நகரில் அப்போது பதற்றம் ஏற்படவில்லை. நேரம் செல்லச் செல்ல புகையின் அளவு அதிகமாகி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து அதிநவீன இயந்திரங்கள் கொண்டு தீயை அணைக்க மீட்பு படையினர் விடிய விடிய போராடினர். வீரர்கள் சோர்வடைவதைத் தடுக்க ஷிப்ட் முறையில் மீட்பு பணி நடைபெற்றது. இருப்பினும் கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடும் வெப்பத்தின் காரணமாக விரிசல் அடைந்த கட்டடத்தின் ஒருபகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி, மாடியில் இருந்து தீ விபத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்தச் சூழலில் கட்டடத்தை இடிப்பதற்காக ராட்ச இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இயந்திரம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் இடிப்பு பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.