சென்னை ஐஐடியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்ரான்சு சேகர் என்பவர் சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பாட பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு வயது 21. இவர் சென்னை ஐஐடி வளாக விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசமால், தனிமையில் மன அழுத்தத்தில் இருந்ததாக சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அறையின் கதவு உடைக்கப்பட்டு பார்த்த போது, அவர் தூக்கிட்டு இறந்த நிலையில் இறந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர்புரம் காவல்துறையினர், மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க:தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்..! தேர்வை ஒத்திவைக்க வேண்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்
பின்னர் அவரது அறையில் சோதனை நடத்திய போலீசார், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவனின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் கல்லூரிக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீப மாதங்களில் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அவர், வேலை அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை எனக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்..! பள்ளியில் சாதிய பாகுபாடா..? ஆட்சியரிடம் அறிக்கை ..?
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது எப்பொழுதும் தீர்வாகாது. எனவே இந்த உலகத்தின் அழகியலை அனுபவிக்காமல் மரணத்தை தேடி செல்லும் முடிவை இளைய சமுதாயத்தினர் கைவிட வேண்டும். விரக்தி, வெறுப்பு, மன அழுத்தம், தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050