
பினாமி பெயரில் பணத்தை பரிமாற்றம் செய்பவர்கள், சொத்துக்களை பரிமாற்றம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்படும் என வருமான வரித்துறை நேற்று மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூபாய் நோட்டு தடை
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடைக்குபின், அடுத்தவர்களின் கணக்கில் வராத செல்லாத ரூபாய்களை தங்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யாதீர்கள், அவ்வாறு செய்தால் பினாமி சட்டம் பாயும் என்று வருமான வரித்துறை எச்சரித்து இருந்தனர்.
இந்தநிலையில், பினாமி பரிமாற்றம் சட்டம் தொடர்பாக வருமான வரித்துறை நேற்று தேசிய நாளேடுகளில் விளம்பரம் செய்து இருந்தது. அது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.
ஈடுபடாதீர்கள்
கடந்த 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பினாமி சொத்து பரிமாற்ற சட்டம் கடந்த 2016ம்ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதலால், யாரும் பினாமி பெயரில் எந்தவிதமான பரிமாற்றத்திலும் ஈடுபடாதீர்கள்.
கருப்பு பணம் என்பது மனிதர்களுக்கு எதிரான குற்றம். நாட்டில் கருப்புபணத்தை ஒழிக்க ஒவ்வொரு குடிமகனும் மனசாட்சியுடன் செயல்பட்டு, அரசுக்கு உதவ வேண்டும்.
7 ஆண்டு சிறை
இந்த பினாமி சட்டத்தின்படி, பினாமிதாரர்(பினாமியாக இருப்பவர்), பயன் அடைபவர்(சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்), பினாமி பரிமாற்றத்தில் ஈடுபட தூண்டுபவர்கள், ஆகியோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும், பினாமி சொத்துக்களின் இப்போதைய சந்தை மதிப்பில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
5ஆண்டு சிறை
அதுமட்டுமல்லாமல், அதிகாரிகளிடம் தவறான தகவல்களை தரும் நபர்கள் மீது, பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆண்டு 5 ஆண்டுகள் சிறையும், பினாமி சொத்தின் மதிப்பில் 10சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், பினாமி சொத்துக்களை அரசு முடக்கி, கையகப்படும், மேலும், 1961ம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின்படி, கூடுதல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூபாய் நோட்டு தடைக்கு பின், பினாமி சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் இருந்து 230 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ஏறக்குறைய ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் 140 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர், அதில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சம்பந்தப்பட்டுள்ளது.
மேலும், 124 வழக்குகளில் தொடர்புடையவர்களின் ரூ.55 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கம்
இந்த முடக்கப்பட்ட சொத்துக்களில் வங்கிகளில் செய்யப்பட்ட பெரிய அளவிலானடெபாசிட் பணம், வங்கிக்கணக்குகள், விவசாய நிலம், வீடுகள், நகைகள், தங்கம், விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல அடங்கும்.