
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் கைவிரித்ததால் இன்று ஒட்டுமொத்த தமிழகம் வறட்சிக் காடாக காட்சியளிக்கிறது..... வாஞ்சையோடு நடப்பட்ட நெற்கதிர்கள் வாடி வதங்கியதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விஷம் அருந்தியும், தூக்கிட்டும் மாண்டுள்ளனர்.
கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் மேட்டூர் , பவானிசாகர், கல்லணை உள்ளிட்ட பல அணைகளின் நீர் இருப்பு அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
விரிசல் கண்டு வீழ்ந்து போயிருக்கும் விளைநிலத்தில் செய்வதறியாது நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகளுக்கு இன்பச் செய்தியினை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்...
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரின்றி பரிதவிக்கும் விவசாயிகளுக்கும், குடிநீருக்காக கூக்கிரலிடும் வெகுஜென மக்களுக்கும் இம்மழை ஆறுதலாய் அமையுமா?