
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலத்தில் தமிழகம் 3வது முறையாக முதலிடம் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகளாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கடந்த ஆண்டு 34.40 கோடி பேர் வந்து சென்றனர். அதேபோல், கடந்த ஆண்டுகளைவிட 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள், அதிகளவில் வருகை தரும் மாநிலங்களின் பட்டியல் சமீபத்தில் கண்கீடு செய்யப்பட்டது. அதில், தமிழகத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் உள்ளது.
தமிழகத்தில் மாமல்லபுரம், முட்டுக்காடு உள்பட பல்வேறு மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சுற்றுலா தலங்கள், கோயில்கள் ஏராளமாக உள்ளன. இதனால், தமிழகம் முக்கிய அம்சம் உள்ள மாநிலமாக திகழ்கிறது.
அதே நேரம் தமிழகத்தில் மிகச் சிறந்த மருத்துவமனை வசதிகள் இருப்பதும், வாகன வசதிகளும், மாநில சுற்றுலா துறையும் மிகச் சிறந்த சேவையை செய்து வருகிறது. இதனால், தமிழகத்தை நோக்கி பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றன.
வாராணசி செல்லும் மக்கள், அங்கிருந்து ராமேஸ்வரம் வருகிறார்கள். தமிழகத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ராமேஸ்வரமும் விளங்குகிறது. அதற்கடுத்த இடத்தில் திருச்சி மற்றும் மதுரை இடம்பெற்றுள்ளது.