
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பேராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் இன்றுடன் முடியுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துகு முடிவு செய்தது. இதற் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, போராட்ட குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். இதை தொடர்ந்து. நேற்று இரவு பேராவூரணியில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தினால், இன்றுடன் போராட்டமும் நிறுத்தப்படும் இல்லாவிட்டால் மேலும் தொடரும் என அறிவித்துள்ளனர்.
முன்னதாக புதுக்கோட்டை கலெக்டரை சந்தித்து, இதுதொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளனர். அதன் பின்னர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி புதுக்கோட்டையில் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நெடுவாசல் அடுத்த கோட்டைகாடு கிராமத்தில் இன்று 6வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடருமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராஜா, தமுமுக மூத்த தலைவர் ஜவஹிருல்லா ஆகியோர் நெடுவாசல் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மக்களிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்து பேசி வருகின்றனர்.