
கிருஷ்ணகிரி:
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட பாமகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுக - திமுகவோடு எப்போதும் கூட்டணி வைப்பதில்லை என்ற பாமக ராமதாஸின் முடிவைத் தொடர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெற்றிப் பெற முடியவில்லை.
கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரைத் தொகுதியில் அந்த கட்சி வேட்பாளர், மூன்றாம் இடம் பிடித்தனர்.
இந்த நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிமுக - திமுக கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும் எனவும், அதே நேரத்தில் தங்களது தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும், கிருஷ்ணகிரியில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக - திமுக கட்சிகளின் ஓட்டு வங்கி பலமாக உள்ள நிலையில், அவர்களுடன் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டி என்ற முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தனித்து போட்டியிட பணம் செலவழிக்க தங்களால் முடியாது என்று கிருஷ்ணகிரி மாவட்ட பாமக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.