
தமிழகம் வந்த பிரதமருக்கு நெடுவாசல் வருவதற்கு வழி தெரியவில்லையா என ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவ மானவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து நெடுவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் குதித்தனர்.
அவர்களை தொடர்ந்து இளைஞர்களும், மாணவர்களும், அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை.
இதனிடையே கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சார்பில் அமைத்துள்ள 112 அடி சிவன் சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அந்த சிலையை திறந்து வைத்து விட்டு டில்லி சென்றுவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சேது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவ மாணவிகள் நுழைவாயில் முன்பு கல்லூரிகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகம் வந்த பிரதமருக்கு நெடுவாசல் வந்து மக்களின் கருத்தை கேட்டறிய நேரமில்லையா என கேள்வி எழுப்பினர்.