
நீலகிரி
விரைவில் தமிழகத்திற்கு தேர்தல் வரும். மக்களின் ஆதரவு பெற்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்பார் என்று நடிகர் ரஞ்சித் கூறினார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி ஒன்றியக் கழக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலுள்ள முத்தைய்யா அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு நடிகர் ரஞ்சித் தலைமை வகித்தார். கோத்தகிரி நிர்வாகி நடராஜ் அனைவரையும் வரவேற்றார். கோத்தகிரி ஒன்றியப் பொறுப்பாளர் ராமு, கூடலூர் பொறுப்பாளர் ஜெயசீலன், உதகை பொறுப்பாளர் எல்.ஜி. சீனிவாசன், நெடுகுளா குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நடிகர் ரஞ்சித்துக்கு கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு நடிகர் ரஞ்சித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் விபத்தில் இறந்து விட்டார். இவர்களை இயக்கியது யார்? இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்பது மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கு யாரையோ காப்பாற்ற நடத்தப்படும் நாடகம் போல் தெரிகிறது.
கோடநாடு பங்களாவில் ஆவணங்களை கொள்ளையடிக்க வந்தார்களா? அல்லது ஆவணங்களை வைக்க வந்தார்களா? என்பதும் புரியவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து காவலாளியின் புகாரின் அடிப்படையில் மட்டுமே காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ். அணிக்கு அதிகரித்து வருவதால் மக்களை திசை திருப்ப வேண்டியே இரு அணிகள் இணைப்பு குறித்துப் பேசி வருகின்றனர்.
விரைவில் தமிழகத்திற்கு தேர்தல் வரும். மக்களின் ஆதரவு பெற்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்பார்” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட பொறுப்பாளரும், குன்னூர் கண்டோன்மெண்ட் துணைத் தலைவருமான பாரதியார் பேசியது:
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.
136 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக ஆளும் அதிமுகவினர் கூறினாலும் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டு போட்ட இரண்டரை கோடி மக்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் உள்ளது.
ஓட்டுப் பெற்றவர்களின் ஆதரவு ஆளும் அணிக்கு இருப்பினும் ஓட்டளித்தவர்களின் மனதில் ஓ.பி.எஸ்.தான் முதல்வராக உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கழகத்தின் ஊழியர்கள் அனைவரும் நிர்வாகிகள். வரும் தேர்தலின் ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உறுதி எடுத்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.