ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. இதை செய்யவில்லை எனில் பெயர் நீக்கப்படும்.. முக்கிய அறிவிப்பு..

By Ramya s  |  First Published Feb 6, 2024, 10:06 AM IST

நியாய விலைக்கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்யாவிட்டால், இந்த மாத இறுதிக்குள் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தம் 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் என வெவ்வேறு பிரிவுகளில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றனர். நியாயவிலைக் கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கவும், கடைப் பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவும் பயோமெட்ரிக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

மேலும் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று விரல் ரேவையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் நடைமுறை அமலில் உளது. எனினும் நேரில் சென்று விரல்ரேகையை பதிவு செய்து பொருள்களை பெற முடியாதவர்கள் அதற்கான படிவத்தில் சான்றளித்து வேறொரு நபர் மூலம் பொருள் வாங்கிக்கொள்ளலாம். முதியோர், மாற்று திறனாளிகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. 

Latest Videos

இந்த சூழலில் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் நியாயவிலை கடைகளுக்கு வந்து விரல் ரேகையை பதிவு செய்து பெயர் இருப்பதை உறுதி செய்யவும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள நியாய விலை கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நியாயவிலை கடை ஊழியர்கள் இதுகுறித்து பேசிய போது “ ஒவ்வொரு நியாயவிலை கடையிலும் உள்ள அனைத்து அட்டைதாரர்களின் பெயர், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்து அளிக்கும் படி உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இந்த மாதத்தில் பொருள் வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்களிடம், அட்டையில் பெயர் உள்ள அனைவரும் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே பல நியாய விலைக்கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்யாவிட்டால், இந்த மாத இறுதிக்குள் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் எண்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் தற்போது தேவு நடைபெற்று வரும் சூழலில், குடும்ப அட்டையில் பெயர் உள்ள மாணவர்களையும் அழைத்து வர வலியுறுத்துவது எந்த வகையில் ஏற்புடையது அல்ல என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  

click me!