தமிழகம் வரும்போது புதிய சக்தியை பெறுகிறேன்: பிரதமர் மோடி!

By Manikanda Prabu  |  First Published Jan 2, 2024, 1:51 PM IST

தமிழகம் வரும்போதெல்லாம் புதிய சக்தியை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய அவரை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவர்கள் மத்தியில் அப்போது பேசிய அவர், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி புதிய சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு நிலை புதிய முனையக் கட்டடம், ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Tap to resize

Latest Videos

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ் மொழியை புகழாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். தமிழகத்தின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து தமிழ் கலாசாராத்தை நான் கற்றுக் கொள்கிறேன். உலகில் நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழர் பாரம்பரியம் நாட்டிற்கு வழங்கிய நல்லாட்சியின் முன்மாதிரியை ஈர்க்கும் முயற்சியாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டது.” என்றார்.

“இன்று இந்தியா முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. இன்று இந்தியா உலகின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்து அதன் மூலம் தமிழகம் மற்றும் நாட்டு மக்கள் பலன் பெற்று வருகின்றனர். மேக் இன் இந்தியாவின் மிகப்பெரிய தூதராக தமிழ்நாடு திகழ்கிறது.” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

கடந்த ஓராண்டில், 40க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், 400க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தமிழகம் வேகமாக முன்னேறும் போது நாடும் வேகமாக முன்னேறும் என்றார்.

“2004-2014 வரை மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் அரசு ரூ.120 லட்சம் கோடி வழங்கியுள்ளது. 2004-2014 ஆண்டுகளில் வழங்கியதை விட 2.5 மடங்கு கூடுதல் தொகையை தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மீனவர்களின் வாழ்க்கையை மாற்றவும் பல பணிகளைச் செய்துள்ளதாகவும், முதன்முறையாக மீன்வளத்துக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதற்கென தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். முதன்முறையாக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“2023ஆம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் தமிழ்நாட்டில் பலருக்கு கடினமாக இருந்தது. கனமழையால் சக குடிமக்கள் பலரை இழந்தோம். கணிசமான அளவு உட்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டன. நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், சில நாட்களுக்கு முன்புதான் விஜயகாந்தை இழந்தோம். சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். ஒரு அரசியல்வாதியாக, அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேச நலனை முன்னிறுத்தியவர். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதேபோல், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை நினைவு கூர்ந்த பிரதமர், நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றிய அவரையும் கடந்த ஆண்டும் இழந்தோம். அவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறினார்.

click me!