
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று இரவுக்குள் போராட்டம் தொடருமா, இல்லை கைவிடப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து நெடுவாசல் மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
மேலும் இத்திட்டத்திற்கு குறைந்த அளவு நிலப்பரப்பே தேவைப்படும் எனவும், இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் தெளிவு படுத்தியிருந்தது.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போராட்ட குழுவினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசு அனுமதி தராமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், போராட்டம் தொடருமா இல்லை கைவிடப்படுமா என்பது குறித்து இன்று இரவுக்குள் அறிவிப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.