
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 நாட்களாக நெடுவசலில் நடைபெறும் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16 ஆம் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. ஆனால் போராட்டகாரர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவ மாணவியர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே மாணவ மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தை கைவிட வேண்டும் என நெடுவாசல் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
போலீசார் நெடுவாசல் சுற்றியுள்ள கிராமங்களில் 8 சோதனை சாவடிகள் அமைத்தும், 33 இடங்களை பேருந்துகளை நிறுத்தி வைத்தும் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்டுள்ள இத்தகைய பணி கைது நடவடிக்கைகாக கூட இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.