
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்று மதுரை தம்பிதியினர் நடத்தி வரும் சட்டப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தற்காலிக தடை விதித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர்கள் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர்.. மேலூர் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தாக்கல் செய்த வழக்கு ஒன்று தற்போது ஒட்டுமொத்த கோடம்பாக்கம் வட்டாரத்தையே பரபரப்பாக்கியுள்ளது.... புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதே அந்த வழக்கின் சாரம்சம்.
புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷை ஏழ்மைத் தம்பதியினர் சொந்தம் கொண்டாட இவ்வழக்கின் மீதான எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கியது... ஆரம்ப கட்டத்தில் இருந்த இவ்வழக்கை துரிதப்படுத்திய மேலூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி தனுஷ் மற்றும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினருக்கு உத்தரவிட்டது.
விசாரணையின் போது நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தம்பதியினர் தாக்கல் செய்த அறிக்கையில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்தகைய முரண்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்த நீதிபதிகள், தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் மேலூர் நீதிமன்றத்தில் தனுஷ் நாளை ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர், தனுஷுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேலும் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர்.
தம்பதி வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில், தனுஷ் மற்றும் தம்பதியினரின் மனுவை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் மறுஉத்தரவு வரும் வரை தனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நியாயத் தராசு யார் பக்கம் என்பது விரைவில் தெரிந்துவிடும்