ஜி.எஸ்.டி-யால் நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடப்படும்; இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பர் – சைமா…

First Published Jun 23, 2017, 7:07 AM IST
Highlights
Hundreds of factories shut down Millions lose their jobs by GST - sima


கோயம்புத்தூர்

செயற்கைப் பஞ்சு, நூல் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் ஒட்டுமொத்த செயற்கைப் பஞ்சு, நூற்பாலைகள், ஆயத்த ஆடை துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடப்படும். இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பர் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் எம்.செந்தில்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற 16-ஆவது குழு கூட்டத்தில் செயற்கைப் பஞ்சு, நூல் மீது 18 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டது. மேலும், ஆயத்த ஆடை, படுக்கை விரிப்புகள் சம்பந்தப்பட்ட துறைக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

80 சதவீதத்துக்கும் அதிகமான ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூலிக்கு வேலை செய்து கொடுப்பவர்கள் என்பதால் 18 சதவீத வரி என்பது அவர்களால் தாங்கக் கூடியது அல்ல.

இவர்களால் ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரே சீரான 5 சதவீத வரி விதிப்புத் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இருப்பினும் அது நடைமுறைக்கு வரும் வரை செயற்கைப் பஞ்சு, நூலின் மீதான வரியை 18-ல் இருந்து 12 சதவீதமாகவும், ஆயத்த ஆடை, படுக்கை விரிப்பு சம்பந்தப்பட்ட கூலி வேலைகளை 5 சதவீத வரி விதிப்பு அட்டவணையிலும் சேர்க்க வேண்டும் என்று சைமா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த வரி குறைப்பு அறிவிப்புகள் 18-ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆயத்த ஆடைத் துறையினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த செயற்கைப் பஞ்சு, நூற்பாலைகள், ஆயத்த ஆடை துறையினரைக் கடுமையாக பாதிக்கும். நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடப்படவும், இலட்சக்கணக்கானோர் வேலையை இழக்கவும் நேரிடும்.

எனவே, ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

click me!