ஜி.எஸ்.டி. வரி முதலில் கஷ்டமாகதான் இருக்கும் பின்னர் அதுவே பழகிடும் என்கிறார் நிர்மலா சீதாராமன்…

 
Published : Jun 23, 2017, 06:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
ஜி.எஸ்.டி. வரி முதலில் கஷ்டமாகதான் இருக்கும் பின்னர் அதுவே பழகிடும் என்கிறார் நிர்மலா சீதாராமன்…

சுருக்கம்

GST starting it will be hard then youll gett used says that Nirmala Sitaraaman ...

கோயம்புத்தூர்

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட உடன் கஷ்டமாகதான் இருக்கும். பின்னர் அது சரியாகி விடும் என்று மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் தெரிவித்தார்.

பா.ஜ.க சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறை குறித்த கருத்தரங்கம் கோயம்புத்தூரில் நடந்தது.

இந்த கருத்தரங்குக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வரவேற்றார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியது:

“நாடு முழுவதும் ஒரே வரிமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்துள்ளது. இதில் விதிக்கப்பட்டு உள்ள வரி விகிதம் பிரதமர் மோடி மட்டும் எடுத்தது கிடையாது.

ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர் அடங்கிய 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஜவுளி துறையினர், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னர்தான் வரி விகிதம் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விரிவிதிப்பில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அதிகாரிகளை அணுகித் தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு வந்த கடிதத்துக்கு அதிகாரிகள் பதில் அளிக்கிறார்களா? என்பது குறித்தும் கண்காணிக்கப்படும்.

இந்த ஜி.எஸ்.டி. மூலம், வணிகர்கள் தங்கள் கையில் இருந்து வரி செலுத்த வேண்டியது இல்லை. மக்களுக்கும் நேரடியாக பயன் கிடைக்கும்” என்று அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் மத்திய மந்திரியிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளற்களிடம் கூறியது:

“ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட உடன் கஷ்டமாகதான் இருக்கும். பின்னர் அது சரியாகி விடும். அதாவது பிறந்த குழந்தைக்கு பற்கள் முளைக்கும் போது வலி இருக்கும். பிறகு அந்த பற்களால் பலன் அதிகம். அதுபோன்று தான் ஜி.எஸ்.டி. வரியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

தற்போது வரை அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு வரிகள் உள்ளன. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பின்னர் ஒரே வரிதான் இருக்கும். மூன்று மாதங்களுக்கு பின்னர் அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.

தற்போது வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு அனைத்து மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரிக்கு பின்னர் எந்த ஒரு பொருளை எடுத்துச்செல்ல எந்த சோதனைச்சாவடிகளிலும் வரி செலுத்த தேவையில்லை. இதனால் அந்த பொருட்களை சேர வேண்டிய இடங்களுக்கு மிக விரைவாக கொண்டு செல்ல முடியும். பயண நேரமும் பாதியளவு குறையும்.

இந்த வரிவிதிப்பு முறை ஊழல், லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதிகாரிகள் கடைகளில் சென்று வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்க முடியாது.

ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை இனிமேல் கிடைக்காதோ என்று பயப்பட வேண்டாம். அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை.

பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கிடையாது. வரும் காலத்தில் அதையும் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தும்.

இந்த வரிவிதிப்பை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநில நிதி அமைச்சர்களும் இடம் பெற்று உள்ள குழுதான் வரிவிதிப்பை நிர்ணயம் செய்தது. பின்னர் ஏன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறை கூறுகிறார்கள்? என்பது தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் கோவையில் உள்ள தொழில் முனைவோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?
‘எமது கொள்கை தலைவர்’ பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்