கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு என்ன ஆச்சு.? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை

Published : Aug 25, 2025, 10:25 AM IST
nallakannu

சுருக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு, வீட்டில் விழுந்து காயமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Senior communist leader Nallakkannu : இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக அரசியல் இயக்கங்களில் முக்கிய பங்காற்றி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நல்லக்கண்ணு 1925 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகள் போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் பெரும்பாலான நாட்கள் போராட்டம், சிறை வாழ்க்கை என கழித்தவர் நல்லகண்ணு.

வீட்டில் கீழே விழுந்த நல்லகண்ணு

நல்லகண்ணுவின் செயல்பாட்டை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் தகைசால் தமிழர் விருதையும் வழங்கியது. இந்த நிலையில் 100 வயதை தாண்டிய நல்லகண்ணு வீட்டில் கீழே தடுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நல்லகண்ணு உடல் நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய திரு. இரா. நல்லகண்ணு நேற்று முன் தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை, நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நல்லகண்ணு உடல் நிலை எப்படி உள்ளது.?

இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க, நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!